உதயநிதி ஸ்டாலின் கெத்து படத்திற்கு வரிவிலக்கு; உயர்நீதிமன்ற நீதிபதி அரசிற்கு நோட்டீஸ்


posted by:newstamil
2016-01-22 03:56:00

gethu-film-title-tamil-word-says-madras-hc-justice

உதயநிதி ஸ்டாலின் நடித்த கெத்து படத்திற்கு தமிழக அரசு வரி விலக்கு வழங்காததை கண்டித்து, உதயநிதி ஸ்டாலின் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கெத்து’ படத்துக்கு கேளிக்கை வரிச்சலுகை வழங்க மறுத்ததை எதிர்த்து, ரெட் ஜெயின்ட் மூவிஸ் பட தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர் சரவணமுத்து தாக்கல் செய்துள்ள மனுவில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘கெத்து’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் கடந்த 14- ஆம் தேதி வெளியானது. இந்த படத்துக்கு கேளிக்கை வரி விலக்களிக்க படத்தலைப்பான ‘கெத்து’ என்ற வார்த்தை தமிழ் வார்த்தை அல்ல என கூறி படத்துக்கு கேளிக்கை வரிச் சலுகை வழங்க முடியாது என்று தமிழக அரசு கடந்த 14- ஆம் தேதி அரசாணை வெளியிட்டது.

திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ள அகராதியில், ‘கெத்து’ என்ற வார்த்தைக்கு ‘தந்திரம்’ என்று பொருள் கூறப்பட்டுள்ளது. அதேபோல, மற்றொரு க்ரியாவின் தற்கால தமிழ் அகராதியில், கெத்து என்ற வார்த்தைக்கு ‘தன்னுடைய உயர்வையும், பெருமையையும் காட்டிக் கொள்ளும் போக்கு’ என்று அர்த்தம் கூறியுள்ளது.

எனவே, படத்துக்கு வரிச்சலுகை தர மறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கேளிக்கை வரிச்சலுகை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி மகாதேவன், கெத்து என்ற வார்த்தை தமிழ் வார்த்தைதான். அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் கெத்து மனம் படைத்த முருகா! என்று பாடியுள்ளார். அந்த வார்த்தைக்கு செருக்கு, ஆணவம் எனப் பொருள்படும் என்று தெரிவித்தார்.

கெத்து என்பது தமிழ் வார்த்தை தான் என்று கூறியுள்ள நீதிபதி, வரும் 27ம் தேதிக்குள், இதுதொடர்பாக விளக்கமளிக்க தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.

TAG: உதயநிதி ஸ்டாலின், Gethu, கெத்து, udhayanidhi stalin

உடனடி செய்திகளுக்கு எப்போதும் நியூஸ்தமிழ் வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.